Friday 3rd of May 2024 03:29:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்! - அஸாத் ஸாலி பெருமிதம்!

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல்! - அஸாத் ஸாலி பெருமிதம்!


"கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்."

- இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அவற்றையெல்லாம் புறந்தள்ளி, பொதுவான சிந்தனைக்குள் வேற்றுமையில் இவர்கள் ஒற்றுமை கண்டிருப்பது, தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதிலும், உரிமைப் பிரச்சினைகள் மாத்திரமின்றி, சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கும் தீர்வு தர வேண்டும்.

இவர்களைப் பின்பற்றி, முஸ்லிம் கட்சிகளும் சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.

தேசிய ஐக்கிய முன்னணியானது, சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கு பல தடவை முயற்சித்தது. ஆகக் குறைந்தது முஸ்லிம் கட்சிகளையாவது ஒன்றுபடச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகின. தலைமைத்துவங்களின் தலைக்கனங்களும் கௌரவப் பிரச்சினைகளுமே இந்தச் சமூகத்தின் சாபக்கேடாகியுள்ளன.

பொதுத்தேர்தலில் எதிரணியில் நின்று வெற்றிபெற்றவர்கள், இப்போது சமூகம் தொடர்பில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாது ஆளுங்கட்சியில் தாவப் பார்க்கின்றனர்.

எனவே, முஸ்லிம் கட்சிகள் தமது நலன்களுக்கு அப்பால் சமூகத்துக்காக உழைக்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE